Monday, December 31, 2007

திருப்பாவை #16

ஸ்ரீ:


(பாவையர்கள் எல்லோரும் திருக்கோவில் முன்சென்று பாடுகின்றனர்.)

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்...........(16)


உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்த கோபனுடைய திருக்கோவிலைக் காப்பவனே! கொடிகள் மற்றும் தோரணங்கள் மேவும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளைத் திறப்பாய்!

கோகுலத்தின் சிறுமியர்களாகிய எங்களுக்கு நோன்பு நிறைவதற்கான பலனை (பறை) தருவதாக , மாயவன், கருநீல மணிவண்ணன், கண்ணன், நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமானை துயில் எழுப்ப பாடுவதற்கு, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம்.

உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்து சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கி திறந்து விடு.




Labels: , ,

Sunday, December 30, 2007

திருப்பாவை #15

ஸ்ரீ:




எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ?போந்தாரை வந்தெண்ணிக்கொள்
வல்லானைக்கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.............(15)

பொருள்:
எழுப்புவோர்: ஏண்டி! கிளி போல் மிழற்றும் குமரியே! இன்னமும் உறங்குகின்றாயே!

எழாதிருப்பவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்:நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிந்திருக்கின்றோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

எழாதிருப்பவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்:: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ப் பார்த்துக் கொள்: குவாலயாபீடம் என்ற யானையை (வல்+யானை) கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.

குவலாயாபீடம் என்னும் யானையைக் கொன்றவன்:

கம்சனால் வஞ்சனையாக மதுராவிற்கு வரவழைக்கப்பட்ட கிருஷ்ண பலராமர்கள். கம்சன் அரண்மனை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மணை வாயிலில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த குவாலயாபீடம் என்னும் மதயானை கண்ணனைக் கொல்ல வந்தது. அந்த மாயன் மணிவண்ணன், ஊரார் அனைவரும் காணும் வகையில் அந்த யானையின் தந்தங்களை முறித்து, அதையே ஆயுதமாகக் கொண்டு யானையைக் கொன்றார். பகைவனது செருக்கையும் அழித்தார்.

இவ்வளவு ஆற்றல் படைத்தவன் நமக்கு எளியன் ஆனான். இதுவே அவன் மாயம். எனவே அந்த பரந்தாமனைப் பாடிக் கொண்டு பாவை நோன்பைக் கொண்டாடுவோம் என்று ஆயர் சிறுமியர் புறப்ப்டுகின்றார்கள் என்பதை,
"வல்லானை கொன்றானை" என்னும் பாசுர வரிகளில் புலப்படுத்தியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.
கோவிந்தன்:
ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா என்றும் "மாற்றாரை மாற்றழிக்க வல்லானை" என்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

Labels: , ,

திருப்பாவை # 14

ஸ்ரீ:




உங்கள்புழைக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர்வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பினகாண்
செங்கற்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பவாய்!.........(14)


பொருள்: உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் பூத்தன, ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து வாய் மூடின. பொழுது விடிந்து விட்டதே உனக்கு விளங்கவில்லையா?

தாம்பூலம் தரியாததால் வெண் பற்களைக் கொண்ட தவசீலர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோவில்களை திறக்க சென்று விட்டனர்.

முந்தி வந்து உங்களை நானே வந்து எழுப்புவேன் என்று வாய் சவடால் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நாவின் நீட்சியுடையவளே! சங்கு, சக்கரம் ஏந்திய நீண்டக் திருக்கைகளையும், தாமரைக் கண்களையும் உடைய அந்த எம்பெருமானை பாடுவோமாக!

Labels: , ,

Friday, December 28, 2007

திருப்பாவை # 13

ஸ்ரீ:



புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகளெள்ளாரும் பாவை களம் புக்கார்
வெள்ளியெழுந்து வியாழம் முழங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்!...............(13)


பொருள்:


நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா இராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழன் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!

புள்ளின் வாய்க் கீண்டான்:


இப்பாசுரத்தில் கிருஷ்ணர் செய்த லீலையான பகாசுர வதம் கூறப்பட்டுள்ளது. பூதனை, சகடாசுரன் முதலியோரை அனுப்பியும் கிருஷ்ணரை ஒன்றும் செய்ய முடியாத கம்சன் அடுத்து பகாசுரன் என்னும் அசுரனை ஏவினான். அவனும் கொக்கின் வடிவம் கொண்டு சென்று யமுனை நதிக் கரையில் கண்ணனை விழுங்கினான். அவனது நெஞ்சத்தில் அந்த மணி வண்ணன் மாயக் கண்ணன் நெருப்பைப் போல எரிக்கவே, அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து தன் அலகால் குத்தத் தொடங்கினான். கண்ணன் அவனது வாய் அலகுகளைப் தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்து எறிந்து அவனை வதம் செய்தார். இதை "புள்ளின் வாய் கீண்டான் " என்னும் பாசுர வரிகளினால் விளக்குகின்றார் கோதை நாச்சியார்.


பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்:
பொங்கி வந்த கோபத்தினால் தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனை வதம் செய்தவர், மனதுக்கு இனியவரான இராமபிரான் என்னும் இராமாவதார பெருமையை "... பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை" என்று பாராட்டுகிறார் ஆண்டாள் நாச்சியார்.

Labels: , ,

Thursday, December 27, 2007

திருப்பாவை # 12


ஸ்ரீ:



கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடைப் பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் மறிந்தேலோ ரெம்பாவாய்
! ...........(12)

பொருள்:

இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும் வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே!


மார்கழி மாதத்து பனி எங்கள் தலையில் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய இராவணனை கோபத்தினால் அழித்த இராமபிரானை. இராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை, காகுத்தனை  நினைத்த மாத்திரத்தில் நம் மனத்தில் இன்பம் பயக்க வல்ல பெருமாளை அனைவரும் வாயாரப் பாடுகின்றோம்.

அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக்கிடக்கின்றது உனக்கு? எழப் போகின்றாயா இல்லையா?

சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்றவன்:


சீதா பிராட்டியைக் கடத்திக் கொண்டு சென்ற தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனை பொங்கி வந்த கோபத்தினால் வதம் செய்தவர், மனதுக்கு இனியவரான இராமபிரான் என்னும் இராமாவதார பெருமையை "சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானை" என்று பாடுகின்றார் கோதை நாச்சியார் இப்பாசுரத்தில்.

Labels: , ,

Wednesday, December 26, 2007

திருப்பாவை # 11

ஸ்ரீ:



கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம்பொற்கொடியே!
புற்றவல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமா ரெல்லாம் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!...........(11)


பொருள்:
கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுகூட்டங்களைப் பராமரித்து பால் கறப்பர்;பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே!


நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணியரங்கள்  கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன?

Labels: , ,

Tuesday, December 25, 2007

திருப்பாவை # 10

ஸ்ரீ:


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்றவனந்த லிடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்! ..............(10)



பொருள் :விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே! நாங்கள் இவ்வாறு கூப்பிட்டும் கதவைத்தான் திறக்கவில்லை, பதிலும் கூடவா தர மாட்டாய். புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்தானோ?

ஆழ்ந்த உறக்கமுடையவளே! பெறர்கரிய ஆபரணம் போன்றவளே! வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திறடி.

இராமாவதாரம்:
இப்பாசுரத்தில் இராம பெருமானின் வல்லமையை பாடுகின்றார் ஆண்டாள். இராமபிரானால் இறந்து பட்டவன் கும்பகர்ணன். உன் உறக்கத்திற்கு தோற்று, அவன் உறக்கத்தையும் உனக்கு தந்து விட்டானோ? எனப் பெண்கள் ஒருவரையொருவர் எள்ளி நகையாடும் வகையில் இதனை எடுத்துரைக்கின்றார் ஆண்டாள். "போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ" என்று பாடுகிறார் ஆண்டாள்.

கீதாசாரத்தை எடுத்துச் சொல்லி உலகத்திலே உள்ளவர்களை திருத்த பூமிப் பிராட்டி வராஹ அவதாரத்திலே எம்பெருமானின் மூக்கின் மேல் அமர்ந்திருந்த போது

. அவன் திருவடிகளில் புஷ்பத்தை இட்டு அர்ச்சனை செய்யவும்.

. அவன் திருநாமத்தை உரக்கச் சொல்லவும்

.அவன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்யவும் செய்த சங்கல்பத்தை ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்த போது நிறைவேற்றுகின்றாள்.

 இது வரை பார்த்த திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்களில் எம்பெருமானின் திருநாமங்களைப் போற்றி பாடியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என்பது பெரியோர் வாக்கு.

Labels: ,

Monday, December 24, 2007

திருப்பாவை # 9

ஸ்ரீ:



தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரே? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! .........(9)


பொருள்:


தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம் அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர்கின்றன, அகில் முதலிய தூபம் மணக்கின்றன, சப்ர மஞ்ச கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து உறங்கும் மாமன் மகளே! எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

(மாமன் மகள் இவ்வாறு எழுப்பபட்டும் அவள் எழவில்லை;ஆதலால் அவள் தாயை அழைத்து அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்)

மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாததால் அவள் என்ன ஊமையா? அல்லது செவிடா? ; ஓயாத உறக்கமா? அல்லது ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கின்றாளா?


மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.

மாயம் என்பதற்கு பொது அர்த்தம் பொய் என்பது ஆனால் வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ஆச்சர்யம் என்று பெரியோர்கள் பொருள் கூறுவர். பக்தர்களை தனது சௌலபியத்தால் ஆச்சிரிசியப்படுத்துவதால் அவன் மாமாயன்.  

இப்பாசுரத்தின் உட்கருத்து: இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த கிருஷ்ணனுக்கு பிரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாசுரத்தில் பகவன் நாமாவிற்கு உள்ள மகிமை சொல்லபட்டு இருக்கிறது.பகவான் நாமத்துக்கு அவரை விட சக்தி அதிகமாம். திரௌபதியும் சரி,கஜேந்த்ரனும் சரி தங்களால் தங்களை காப்பற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்தவுடன் அச்சுதா,அனந்தா,கோவிந்தா .சங்க சக்ர கதா பாணி என்றெல்லாம் அழைத்து பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்கள்.அந்த க்ஷணமே அந்த நாமங்கள் காப்பாற்றினவாம்..அப்பேற்பட்ட சக்தி அவற்றுக்கு உண்டு. இங்கே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று பல பேர்களால் சகஸ்ர நாமத்தினால் கூவி அழையுங்கள் என்கிறாள் ஆண்டாள்.
 

Labels: , , ,

Sunday, December 23, 2007

திருப்பாவை # 8

ஸ்ரீ:





கீழ்வானம் வெள்ளன் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்! ...........(8)


பொருள்:
மனமகிழ்ச்சியுடைய பாவையே! கிழக்கே வானம் வெளுத்து விட்டது. எருமைகள் எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பே விடுதலை பெற்று மேய்ச்சலுக்கு சென்று விட்டன.


பாவை நோன்பு செய்யும் இடத்திற்கு நமது தோழிமார்கள் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்கள் அங்கு செல்லும் நோக்கத்துடன் புறப்படுகின்றனர், அவர்களை போக விடாமல் தடுத்து உன்னை அழைக்க வந்து நின்றோம். காரிகையே! காலம் தாழ்த்தாமல் எழுந்து வா!

நம் பெருமான் குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அசுரனை வாயைப் பிளந்து மாய்த்தவர். மதுராபுரியிலே கொடிய கஞ்சன் அனுப்பிய மல்லர்களை வீழ்த்தியவர்.

அந்த தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனை, கச்சிப் பதி மேவிய களிற்றை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால் நம்மீது இரக்கம் காட்டி" வா! வா!" என்று அழைத்து நாம் வேண்டும் வரத்தை அருளும் வரதராஜன் அவர். எனவே விரைவில் எழுந்து வா பெண்ணே!

இப்பாசுரத்தில் அவதாரப் பெருமை:

மாவாய்ப் பிளந்தான்:

கோகுலத்தில் வளரும் கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பியும் அவர்களே கண்ணன் கையில் வதம் ஆவது பற்றிக் கவலைப்படாமல் கம்சன் மேலும் கேசி என்னும் ஒரு அசுரனை அனுப்பினான். அவனும் குதிரை வடிவம் எடுத்து தன் குளம்பால் கண்ணனைக் கொல்ல வெகு வேகமாக ஓடி வந்தான். கண்ணன் அந்தக் குதிரையின் வாயைப் பிளந்து அவனையும் வதம் செய்தார் என்பதை "மாவாய்ப் பிளந்து" என்னும் பாசுர தொடரினால் பாடுகின்றார் ஆண்டாள்.


மல்லரை மாட்டியவன்:
மதுராவில் நடை பெறும் வில் விழாவிற்காக கண்ணனையும் பலராமரையும் வஞ்சனையாக அழைத்த கஞ்சன் அவர்கள் இருவரையும் கொல்ல சாணுரன், முஷ்டிகன் என்னும் மல்லர்களை ஏற்பாடு செய்திருந்தான். கண்ணன் அந்த மல்லர்களுடன் மல்யுத்தம் செய்து அனைவரையும் தோற்கடித்ததை ஆண்டாள் “மல்லரை மாட்டிய தேவாதி தேவனை" என்று பாடுகிறார்.

இப்பாசுரத்தின் உட்கருத்துகிழக்கு  வெளுப்பது என்பது  ஸத்வகுணம் தலையெடுப்பதற்கான அறிகுறி, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாகக் கூறுவது

Labels: , , ,

Saturday, December 22, 2007

திருப்பாவை # 7

                                                                               ஸ்ரீ:




கீசு கீச்சென்றெங்கும் ஆணைசாத் தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயண மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!

பொருள்:

மதி கெட்ட பெண்ணே! விடியற்காலை நேரமாகி விட்டது ஆனைசாத்தன் (வலியன் )பறவைகள் கீசு கீசு என்று தங்களுக்குள் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டு பேசும் பேச்சின் ஒலி இன்னும் உன் காதுகளில் விழவில்லையா?


நெய் மணம் வீசும் கூந்தலையுடைய இடைச்சியர்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலியும், அச்சுத்தாலியும் "கலகல" என்று எழுப்ப தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக் கடையும் "சலசல" என்னும் ஒலியும் கூடவா கேட்கவில்லை?

தலைமையுடைய பெண்ணே! அந்த பரந்தாமனை, நாராயண மூர்த்தியை, கேடில் விழுப் புகழ் கேசவனை, அண்ணலை, அச்சுதனை, அனந்தனை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்! நீ அதைக் கேட்டுக் கொண்டே கேட்காதது போல் படுக்கை சுகத்தில் அமிழ்ந்து கிடக்கின்றாயே, ஒளி பொருந்திய உடலை உடைய கண்ணே! ஓடி வந்து கதவைத் திறடி என் கண்மணி.


உறங்குகின்ற பெண்ணை எழுப்பும் வண்ணம் அமைந்த மற்ற ஒரு பாசுரம், இதிலும் காலை காட்சியை சிறப்பாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.




Labels: , , ,

Friday, December 21, 2007

திருப்பாவை # 6

ஸ்ரீ:





புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! .........(6)


பொருள்:
பெண்ணே பறவைகள் கூவத்தொடங்கிவிட்டன, பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு இறைவன் நம் பெருமாள் எழுந்தருளியுள்ள திருக்கோவிலிலிருந்து வெண்சங்கு முழங்கும் ஓசை உன் காதில் விழவில்லையா?

நம் கண்ணன் வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையில் தடவிய நஞ்சை உண்ட மாயவன். கஞ்சன் அனுப்பிய சகடாசுரனை எட்டி உதைத்து மாள வைத்த திருவடிகளையுடையவன். பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன், உலகுக்கெல்லாம் வித்தானவன்.

அந்த பரமனை உள்ளத்தே கொண்டு முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்து "ஹரி"," ஹரி" என்று ஓதுகின்றனரே அந்த பேரொலி உள்ளம் புகுந்து எங்களை குளிரவைக்கின்றது, உன்னை குளிர வைக்கவில்லையா? சிறு பிள்ளையாய் இருக்கின்றாயே! எழுந்து வா.

அதிகாலை பிரம்மமுகூர்தத காலத்தை அருமையாக காட்டும் பாடல். முதல் ஐந்து பாசுரங்களில் எம்பெருமானின் பெருமைகளையும் பாவை நோன்பின் சிறப்புகளை கூறி வந்த ஆண்டாள் நாச்சியார் ஒரு ஜீவாத்மா மற்றொரு ஜீவாத்மாவை எழுப்பி மாயையை விடுத்து எம்பெருமானின் திருவடியில் சரணடைவோம் வாருங்கள் என்று அழைப்பதைப் போல் தன்னை ஒரு இடைச்சியாக பாவித்து மற்ற பெண்களையும் எழுப்பும் பாசுரங்கள் அடுத்த ஐந்து பாசுரங்கள்.

பேய் முலை நஞ்சுண்டவன்:
கண்ணை கொல்ல கஞ்சன் முதலில் அனுப்பிய அரக்கி பூதனை. அவள் ஒரு இளம் பெண் வடிவம் எடுத்து கோகுலம் வந்து குழந்தையாக இருந்த கண்ணனை நஞ்சுப்பால் கொடுத்து கொல்ல வந்தாள். அவள் நஞ்சுப் பால் கொடுக்கும் போது கண்ணன் பாலோடு சேர்த்து அப்படியே அவளது உயிரையும் சேர்த்து உறிஞ்சினார், அவள் சுய ரூபம் பெற்று அலறி வீழ்ந்து மாண்டாள். இவ்வாறு வஞ்சனையால் வந்த பேய்ச்சி கொடுத்த நஞ்சை அவளுக்கே நஞ்சாக்கினார் எம்பெருமான். இதை பட்டர் பிரான் கோதை "பேய் முலை நஞ்சுண்டு" என்று பாடுகிறார்.

கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சியவன்:
பூதனை மாண்டபின் கண்ணனைக் கொல்ல மற்றொரு அசுரனை அனுப்பினான் கஞ்சன். அவனும் சகட உருவம் எடுத்து உருண்டோடி வந்தான் சகடாசுரன் கண்ணனைக் கொல்ல. ஆனால் பால கிருஷ்ணனோ தனது பிஞ்சுக் கால்களால் அந்த சகடத்தை உதைத்து அவனையும் வதம் செய்தார். இதை ஆண்டாள் நாச்சியார் "கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி" என்று பாடுகிறார்.

Labels: , , ,

திருப்பாவை # 5

ஸ்ரீ:










மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளககை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றளவும்
தீயினால் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய். ..........(5)


பொருள்:

கண்ணனது பெயர் சிறப்பு :
பாற் கடலில் பள்ளி கொண்ட பரமன் கண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை எனன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோரெல்லாம் புகழச் செய்த தாமோதரன்.

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே என்பது பெரியாழ்வாரின் பாசுரம்)
அந்த பெருமாளை நாம் தூய மனதுடன் நல்ல மலர் தூவி வணங்குவோம்; வாயினால் அயர்விலா அமரர்கள் ஆதிக் கொழுந்தே, ஆழிப் படையந்தணணே, உய்ய்க் கொள்கின்ற நாதனே என்று அவனதுப் புகழைப் பாடுவோம்; மனதினால் அவனது தன்மையை நினைப்போம், இவ்வாறு காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரும் பொருட்டிருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட தூசு போல் அழிந்து விடும் ஆகையால் அவனது புகழைப் பேசுவாமாக!

Labels: , ,

Wednesday, December 19, 2007

திருப்பாவை # 4

ஸ்ரீ:



ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து
பாழியம் தோளுடைப் பற்பநா பன் கையில்
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.    (4)


பொருள்கடல் போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே! உனக்கென ஒரு துளி நீரையும் மறைத்து வைக்காதே! கடலுள் செல்! கடல் நீரை முகந்து கொள்! பேரொலியுடன் மேலே ஏறு! ஊழிக் காலத்தின் திருமாலின் கேடில்லா திருமேனி நிறத்தை ஒத்த கருமை நிறம் கொள்! பெருமையும் எழிலும் கொண்ட பத்மனாபனின் வலக் கையில் விளங்கும் சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னிட்டு விளங்கு! இடக்கரத்தில் உள்ள பாஞ்சசன்னியத்தைப் போல முழங்கு! அப்பெருமாளின் சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து எய்யும் அம்பு மழை போல இவ்வையகம் வாழவும், பாவைகளாகிய நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந்தாழ்த்தாமல் மழையைப் பொழி!


பாவை நோன்பின் ஒரு முக்கிய நோக்கமான மழை பெய்ய வேண்டும் பாடல். மழை எவ்வாறு உருவாகின்றது என்று அன்றே பாடியுள்ளாள் கோதை.

Labels: , ,

திருப்பாவை # 3

                                                                       ஸ்ரீ:
                                   






ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகல
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். .........(3)


பொருள்:பாவை நோன்பின் பயன்:


வாமனனாக வந்து நெடியோன் திரிவிக்கிரமனாக ஓங்கி வளர்ந்து இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்த உத்தமன் திருமால்! அந்த பெருமாளின் திருநாமங்களை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, இருடிகேசா ,பத்மநாபா, தாமோதரா, கோபாலா, வாமனா, மாமாயா, தேவ தேவா, பால கிருஷ்ணா, மணி வண்ணா, பூவண்ணா, புள்ளரையா, ஸ்ரீஹரி, பரமா, கண்ணா, மாதவா, வைகுண்ட நாதா என்று பாடி நாம் நம் பாவை நோன்பை நோற்பதன் பலன்கள் என்ன என்று தெரியுமா தோழி?

ஊர் செழிக்க தீமையில்லாமல் மாதம் மூன்று மழை தவறாமல் பெய்யும், அதனால் வயல்களில் செந்நெல் ப்யிர்கள் நெடு நெடுவென வளரும், அந்த பயிர்களின் ஊடே கயல் மீன்கள் துள்ளித் திரியும், நிரம்பியிருக்கும் நீர் நிலைகளில் கருங்குவளை மலர்களில் புள்ளிகளையுடைய அறுகால் வண்டினங்கள் தேனைக் குடித்து மெய் மறந்து உறங்கும். மாட்டுத் தொழுவத்தில் புகுந்து அழகிய பசுக்களின் மடியைப் பற்றி இழுத்தால் பாலை தேக்கி வைத்துக் கொள்ளாமல் வள்ளல்களைப் போல பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும். எப்போதும் அழியாத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும் அறி பெண்ணே!


இப்பாசுரத்தில் அவதாரப்பெருமை: வாமன அவதாரம்



இந்த மூன்றாம் பாசுரம், பதினேழாம் பாசுரம் மற்றும் இருபத்து நான்காம் பாசுரம் மூன்றிலும் ஆண்டாள், எம்பெருமானின் வாமன அவதாரத்தை போற்றுகின்றார். இப்பாசுரத்தில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்னும் பதத்தினால் இவ்வவதார பெருமையை உணர்த்துகின்றார்.


வாமன அவதாரம்: பலி சக்கரவர்த்தி பிரகலாதரின் பேரன், விரோசனரின் புத்திரன், இந்திரப்பதவியை கைப்பற்றியதால் இந்திரனுடைய தாய் அதிதியின் கர்பத்தில் பெருமாள் வாமனனாக அவதரித்தார். "வாமன அவதாரம்" எடுத்து வந்து மஹாபலியிடம் சென்று தவம் செய்வதற்கு தன் காலடியில் மூன்றடி மண் தருமாறு யாசித்தார். மகா பலியும் தருவதற்கு இசைந்து , தாரை வார்த்து தர முற்படும் போது ஓங்கி திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓரடியால் மண்ணுலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்து நின்ற நெடுமால், இன்னுமொரு அடிக்கு மண் எங்கே? என்று வினவ, மகாபலி தன் தலையை தாழ்த்தி வணங்கி நின்றான். பெருமாள் அவனது முடியில் தன் அடியை வைத்து பாதாளத்திற்க்கு அழுத்தி அவனது செருக்கை அடக்கினார்.

பாசுரத்தின் உட்கருத்து:  பக்குவமடைந்த ஜீவாத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின் காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆனந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் பகவான் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம். 

Labels: , ,

Tuesday, December 18, 2007

திருப்பாவை # 2



திருப்பாவை # 2

























வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!  (2)


பாவை நோன்பை செய்யும் முறை: ( செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்)

இந்த மண்ணுலகில் வாழ்பவர்களே! நாம் ந்ல்ல மழை பெறவும், செல்வம் செழிக்கவும், நல்ல கணவனை அடையவும் செய்யும் நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களை கேளுங்கள்!


திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள அரியின் திருவடிகளை எப்போதும் பாடுவோம்.நெய், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதி காலை எழுந்து நீராடுவோம்; கண்களுக்கு மையிட்டு அலங்கரிக்கமாட்டோம், கூந்தலில் மலர் இட்டு அழகு செய்து கொள்ள மாட்டோம்; பெரியோர்களால் செய்யத்தகாதவை என்று கூறப்பட்டுள்ள செயல்களை செய்ய மாட்டோம், எவரிடமும் சென்று கோள் சொல்லமாட்டோம். அண்டி வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை எனாது தர்மம் செய்வோம். இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம். பிறப்பினின்று உய்யும் வழியைக் கருதி பாவை நோனபை கடைப்பிடிப்போம்.

Labels: , ,

திருப்பாவை # 1

ஸ்ரீ:
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே



அன்ன வயற்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.



சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! தொல் பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற விம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.


திருப்பாவை #1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யாசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

மார்கழி மாதத்தின் சிறப்பு:



பொருள்: கோபியரே! கோபியரே! கொஞ்சும் இளம் வஞ்சியரே! பொருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்களே! கண்ணனின் அருட்செல்வம் நிறைந்திருக்கின்ற திருஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே!

நம் கண்ணன் (நாராயணன்) , கூர்மையான வேலுடன் சென்று பகைவர்களை வெல்லும் நந்தகோபனின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், செந்தாமரையை ஒத்த கண்களையுடையவன், குளிர்ச்சி பொருந்திய முகிழ்கின்ற முழுமதி திருமுகத்தினன். அந்த ஸ்ரீமந் நாராயணனே நமது பாவை நோன்பிற்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான்( இம்மை இன்பங்களை மட்டுமல்ல மறுமையில் வைகுண்டப்பதவியையும்) வாருங்கள்! வஞ்சியரே! இந்த மாதங்களில் சிறந்த மார்கழியில், முழுமதி நன்னாளில் கோவிந்தன் பெயரைச் சொல்லி உலகத்தோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோம். ( எம்பெருமான் அனுபவத்தில் திளைப்போம். )என்று தன்னை ஒரு ஆயர்குலப்பெண்ணாகவும், திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபத்ர சாயியை கண்ணனாகவும் பாவித்து பாவை நோன்பை அனுசரிக்க ஆண்டாள் நாச்சியார் அழைக்கின்றார்.

குறிப்பு: இந்த இடுகைகள் சென்ற வருடம் இடப்பட்டன. மார்கழி மாதம் என்பதால் மீண்டும் இடப்படுகின்றன சென்ற வருடம் அனுபவிக்கதவர்களின் நன்மைக்காக.

Labels: , ,