Tuesday, January 08, 2008

திருப்பாவை # 24

ஸ்ரீ:



அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய். (24)

பொருள்:'
திரிவிக்கிரமனாக மூன்று அடிகளால் மூவுலகங்களையும் அளந்த திருவடியை போற்றி வணங்குகின்றோம். இலங்கையை அழித்த உனது திறமையைப் போற்றுகின்றோம். மாய வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து மாய்த்து உனது புகழைப் போற்றுகின்றோம். கன்றில் உருவத்தில் வந்த வத்ராசுரனை எறிந்து விளங்கனி விழ வைத்த உனது திறத்தைப் போற்றுகின்றோம். ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்த உன் கருணை குணத்தைப் போற்றுகின்றோம். பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்ய ஆயுதங்களை வணங்குகின்றோம். என்றென்றும் உனக்கு அடிமையாக இருந்து உன் சேவை புறப்பட்டு இன்று வந்தோம் எங்களுக்கு இரங்கி அருள் புரிவாயா! மதுசூதனா!


புராண வரலாறுகள்:

அன்றிவுலகமளந்தவன்: வாமன அவதாரத்தின் பெருமையே இப்பாசுரத்திலும் "அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி " என்னும் பாசுர வரிகளால் உணர்த்துகின்றார் ஆண்டாள் நாச்சியார். பார்க்க மூன்றாவது பாசுரம்.

சென்றங்கு தென்னிலங்கை செற்றவன்: மேலும் நாங்கள் தேடி வந்த இந்த திருவடிகள் முன்பு சீதா தேவியார் பொருட்டு, தென்னிலங்கை சென்று இராவணனை அழித்து அந்நகரை தீக்கு இரை ஆக்கிய திருவடிகள் என்னும் இராமாவதாரப் பெருமையும் "சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி" என்று போற்றுகின்றார் ஆண்டாள்.


பொன்றச் சகடம் உதைத்தவன்: கஞ்சனால் ஏவப்பட்ட வஞ்சப் பேய் மகள் கண்ணன் கையால் மாண்டதால் கோபம் கொண்ட அவன் மற்றொரு அசுரனை அனுப்பினான் கண்ணனைக் கொல்ல. அவனும் சகட(சக்கர) வடிவம் எடுத்து கண்ணனை ஏற்றிக் கொல்ல உருண்டு வந்தான் அதனை அறிந்த கண்ணன் தனது பிஞ்சுக் கால்களால் அவனை உதைத்து அவனை வதம் செய்தார். இந்த வரலாற்றையே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் "பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!" என்று மங்களாசாசனம் செய்கிறாள்.


கன்று குணிலாய் எறிந்தவன்:
கண்ணனாகிய குழந்தையைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட அசுரர்கள் ஒவ்வொருவராக வந்து மாண்டதால், பின் இரண்டிரண்டாக வரத் தலைப்பட்டனர். கபித்தாசுரன், வத்ராசுரன் என்னும் இரு அரக்கர்கள் இவ்வாறு திட்டம் போட்டு வந்தனர். கபித்தாசுரன் விளா மரமாக நிற்க, கன்றுக் குட்டி போல வத்ராசுரன் உருவெடுத்து சென்று கண்ணனை போக்குக் காட்டி விளா மரத்திற்கு அருகில் வரச் செய்து, வேரோடு கண்ணன் மேல் சாய்ந்து அவரைக் கொல்ல திட்டம் தீட்டி வந்தனர். எல்லாம் அறிந்த மாய க்கண்ணன், மரம் அருகில் வந்து, கோபாலர்கள் விளாம் பழத்தைக் குறி வைத்து அடிக்க சிறு தடியை உபயோகிப்பது போல, கன்று போல வந்த அசுரனை தடியாக மாற்றி விளா மரத்தின் மேல் எறிந்து இருவரையும் வதம் செய்தார் என்ற புராண வரலாற்றை, "கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்னும் பாசுர வரியில் எடுத்துக் காட்டுகின்றார் கோதை ஆண்டாள்.


குன்று குடையாய் எடுத்தவன்: திருவாய்ப்பாடியில் ஆயர்கள் எல்லாரும் கூடி மழையின் பொருட்டு, இந்திரனை வழிபட வழக்கபடி சமைத்தனர்; சமைத்த அச்சோற்றைக் கண்ணபிரான், இந்திரனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தெய்வ வடிவு கொண்டு அமுது செய்தருளினார். இதனையறிந்த இந்திரன் கோபங்கொண்டு, பல மேகங்களை ஏவிக் கண்ணன் விரும்பி மேய்க்கின்ற கன்றுகளுக்கும், பசுக்களுக்கும், இடையருக்கும், இடைச்சியர்களுக்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழு நாட்கள் இடைவிடாது பெய்வித்தான். அப்பொழுது, கண்ணன் கோவர்த்தனம் என்னும் அம்மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையும் காத்தருளினார். அக்கருணையை னைத்து போற்றுகின்ற'ர் ஆண்டாள்"குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்ற இப்பாசுர வரிகளால்.


Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home