Sunday, January 06, 2008

திருப்பாவை # 22

ஸ்ரீ:





அங்கண் மாஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் ................(22)


பொருள்:
பெருமாளே! உன்னிடம் தோல்வியடைந்த அகிலத்து அரசர்கள் எல்லாம் தத்தம் ஆணவம் தொலைத்து உன் பஞ்சனைக்கு பக்கத்தில் வந்து உன்னடியில் காத்து நிற்கின்றனர். அது போல நாங்களும் உன்னைச் சரணடைந்து நீ கண் விழிப்பதற்காக வந்து நிற்கின்றோம்.

சலங்கை போன்று சற்றே வாய் பிளந்த வரதா! செந்தாமரை கண்களால் எங்களை பார்த்தும் பாராமல் சிறிது சிறிதாக விழித்துப் பாரேன்.

அவ்வாறு சூரிய சந்திரர்கள் போன்ற இரு விழிகளால் நீ எங்களை நோக்குவாயே ஆனால் எங்கள் பாவங்கள் அனைத்தும் அகலும். அருளாளா!

Labels: , ,

Monday, December 31, 2007

திருப்பாவை #16

ஸ்ரீ:


(பாவையர்கள் எல்லோரும் திருக்கோவில் முன்சென்று பாடுகின்றனர்.)

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்...........(16)


உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்த கோபனுடைய திருக்கோவிலைக் காப்பவனே! கொடிகள் மற்றும் தோரணங்கள் மேவும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளைத் திறப்பாய்!

கோகுலத்தின் சிறுமியர்களாகிய எங்களுக்கு நோன்பு நிறைவதற்கான பலனை (பறை) தருவதாக , மாயவன், கருநீல மணிவண்ணன், கண்ணன், நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமானை துயில் எழுப்ப பாடுவதற்கு, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம்.

உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்து சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கி திறந்து விடு.




Labels: , ,