Friday, January 11, 2008

திருப்பாவை # 27 ( கூடார வல்லி)

ஸ்ரீ:





கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.   (27)



பொருள்: உன்னை கூடி மகிழாத ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வென்று அடிமைப்படுத்தும் குணக்குன்றே கோவிந்தா!. உன் பக்தர்களிடம் தோற்றுவிடுபவனே கோவிந்தா!

இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அவனி மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் அடைந்திடுவோம்.

நோன்பிற்காக ஒதுக்கிய அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம், தோள் வளையங்கள் அணிவோம், தோடணிவோம்,கைகளில் வளையல்கள் அணிவோம், செவிப்பூவால் சிறப்போம், கால்களில் பாடகம் அணிவோம் இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம், புது பட்டாடையணிவோம்.

இவையெல்லாம் எதற்காக தெரியுமா? எம்பெருமானே! பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய "குறையொன்றும் இல்லாத கோவிந்தன்" உன்னுடன் கூடி உண்ணவே. மனம் குளிர்ந்து நீ எங்களுக்கு அந்த பாக்கியத்தை அருள்வாயாக!

கோவிந்தன்:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை "பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" (பா. 29 ) என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை "கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா" என்னும் இப்பாசுரத்தின் வரிகளாலும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (பா.15 ) என்னும் இரண்டு பாசுரங்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.



இன்றைய தினம் "கூடார வல்லி" தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி மற்ற கோபிகையர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்த குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தனுடன் கூடிய நாள்.

Labels: , ,

1 Comments:

Anonymous Anonymous said...

Its generally said that its not "Valli". Its only Goodaarai Vellum.
The narration is divinely good.
Regards
Manoharan- Karaikal

9:27 PM  

Post a Comment

<< Home